காரைக்குடி அருகே ஊராட்சி மன்ற பொறுப்புத் தலைவர் பதவி இழப்பு. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
![]()
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்றத்திற்கு பொறுப்புத்தலைவராக இருந்த துணைத் தலைவர் பாண்டியராஜன் என்பவரை பொறுப்புத் தலைவர் பதவியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பதவி இழப்பு செய்துள்ளார்.
தமிழகத்தின் மிகப்பெரிய வருவாய் ஊராட்சி கிராமமான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி, பிரியதர்ஷினி ஆகிய இருவர் போட்டியிட்டனர்.
அப்போது இருந்த தேர்தல் அலுவலர் இருவரையுமே வெற்றி பெற்றதாக அடுத்தடுத்து மாறி
மாறி அறிவித்தார்.
பின்னர் இருவரும் நீதிமன்றத்தை அணுகிய வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் துணைத்தலைவர் பாண்டியராஜனுக்கு பொறுப்புதலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.
இவரது பதவிக் காலத்தில் விதிகளைமீறி வரிவிதிப்பு, பெயர்மாற்றம் போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.
இதனால் அவரது பொறுப்புத்தலைவர் பொறுப்பை பதவி இழப்புச்செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை சாக்கோட்டை பி.டி.ஓ விற்கு தலைவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் துணைத்தலைவர் பாண்டியராஜன் இரண்டாம் நிலை அலுவலராக பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

