புதுச்சேரியில் அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பது ஏன்? – பரபரப்பு தகவல்கள்
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். ஜூன் மாதம் 27-ந் தேதி அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன் குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதற்கிடையே அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும். அமைச்சர் நமச் சிவாயத்திற்கு உள்துறை அல்லது நிதித்துறையை வழங்க வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் தான் இலாகாவை ஒதுக்கி தருவேன் என்று ரங்கசாமி கூறியிருந்தார்.
இதற்கிடையே இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க. மேலிட தலைவர்களிடம் நேரடியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் இலாகா பட்டியலை தயாரித்து அதனை கவர்னர் மூலமாக மத்திய அரசின் ஒதுப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதனை ஏற்க மறுத்து பட்டியலை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரங்கசாமியை தொடர்பு கொண்டு, 10 துறைகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும். அதனை 2 அமைச்சர்களுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே தயாரித்த இலாகா பட்டியலை திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். விரைவில் அவர் அந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் என தெரிகிறது. உள்துறை ஒப்புதலுக்கு பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும்.