ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 600 குடும்பங்களுக்கு 12 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்
திருவள்ளூர் ஜூன் 23 : திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் கொரோனா குறித்த தற்காப்பு முறைகள், தடுப்பூசியின் அவசியம் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு அளித்து வருவதோடு,வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள், முகக்கவசம்,சோப்பு,சேனிடைசர் ஆகியவைகளை வழங்கி வருகிறது.
அதன்படி நுங்கம்பாக்கம் கிராமத்தில் கடம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ஒன்றியங்களில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு அல்ட்ரான் கம்பெனி மற்றும் ஹேபிடேட் பார் ஹீமானிட்டி தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 12 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கியது. நிகழ்ச்சியை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மலர்விழி துவக்கி வைத்தார்.
மேலும் நுங்கம்பாக்கம், வெள்ளரி தாங்கல்,பாப்பரம்பாக்கம்,ஈக்காடு,கிளாம்பாக்கம்,விளாப்பாக்கம்,அயத்தூர்,விஷ்ணுவாக்கம்,சிவன்வாயல், மேலக்கொண்டையார் ஆகிய கிராமங்களிலும், விதவைகள்,கணவனால் கைவிடப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள்,அதிக பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள்,ஆதரவற்ற முதியோர்கள் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை தேர்வு செய்து இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சிவன் வாயல் கிராமத்தில் காணொலி மூலமாக அல்ட்ரான் கம்பெனி சி.எஸ்.ஆர் இயக்குனர் டாக்டர்.நூசத் அலிமற்றும் ஹேபிடேட் பார் ஹீமானிட்டி தொண்டு நிறுவனத்தை சார்ந்த முதுநிலை மேலாளர் நீரஜ் டங்க்வால் மற்றும் துணை மண்டல இயக்குனர் முனிஸ், சிவன்வாயல் ஊராட்சி மன்ற தலைவர் மணி, அங்கன்வாடி பணியாளர்கள்,ஐ.ஆர்.சி.டி.எஸ் திட்ட மேலாளர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் மேலக்கொண்டையார் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன்,ஐ.ஆர்.சி.டி.எஸ் கள ஒருங்கிணைப்பாளர்கள் பழனி,மணி வேளாங்கண்ணி,ராஜேஷ் மற்றும் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.