கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரும் பயணிகளுக்கு இ பாஸ் முறை கட்டாயம்… மாவட்ட கலெக்டர் அரவிந் தகவல்…
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ முகாம்களை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து தெரிந்து கொண்டார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:
குமரிமாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை விரைந்து தயார் செய்து வருகிறோம்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 130 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுதவிர ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி போன்றவற்றில் தற்காலிக சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் இதற்காக 4 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. குமரி எல்லையில் செக்போஸ்ட் அமைத்து கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சோதனை செய்து வருகிறோம். கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இ பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கிறோம்.
இதுவரை மாவட்டம் முழுவதும் 67 ஆயிரம் பேருக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளோம். இதுதவிர தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.