ஆத்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; கடை உரிமையாளருக்கு அபராதம்!
சேலம் மாவட்டம், ஆத்தூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல். ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஸ்ரீதேவி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படி ஆத்தூர் நகராட்சியின் அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர், ஆத்தூர் நகர பகுதிகளான ராணிப்பேட்டை, கடலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் ஒரு மொத்த விற்பனைக் கடையில் சுமார் 10 கிலோவிற்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். இதில், ஆத்தூர் நகராட்சியின் துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்பரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மேஸ்திரி மரியசுதன் உள்ளிட்டோர் இருந்தனர்.