காக்களுர் ஆவின் பால் பண்ணையில் ரூ.75 இலட்சத்தில் ஆய்வகம் மற்றும் அதிநவீன பாலகம் : மேலாண்மை இயக்குநர், ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தார் :
திருவள்ளுர் மாவட்டம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பாக, காக்களுர் ஆவின் பால் பண்ணையில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் அதிநவீன பாலகம் ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநர் ஆர்.நந்தகோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியத்தி;லுள்ள, காக்களுர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சராசரியாக 58000 லிட்டர் மூன்று வகையான பால் உள்ளுர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 37000 லிட்டர் பால் இணைய விற்பனை செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மொத்தம் 16 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது காக்களுர் பால் பண்ணை வளாகத்தில் ஆவின் நவீன பாலகம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதில் பால் மற்றும் கோவா, நெய், மைசூர்பா, பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், தயிர் போன்ற பால் உபபொருட்கள் தயாரித்து நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் விரிவுபடுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் காக்களுர் பால் பண்ணைக்கு வரும் பாலை கொழுப்பு சத்து,புரதச்சத்து,என தரம் பிரிக்கப்படுகிறது. மேலும் பால் கோவா , பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், நெய், தயிர் இவற்றையும் தரம் பார்த்து நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அதிநவீன பாலகத்தில் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளுர் மாவட்டத்தில் காக்களுர் ஆவின் பால் பண்ணையில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு காணொலிகாட்சி வாயிலாக திறந்து வைத்த கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக தலைமை அலுவலக கட்டடம் அகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.
இதில் காஞ்சிபுரம் – திருவள்ளுர் ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் த.கவிசந்திரன், காக்களுர் ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் யு.சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.