இன்று காலை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பயணம் திட்டம் என்ன ?

Loading

பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வருகிறார்.
தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, 3 ஆயிரத்து 640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திபட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அர்ஜூன் போர் டாங்கியை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தவிர சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக டிஸ்கவரி வளாகம், கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் காலை 8 மணி முதல் மதியம் 1மணி வரை முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி இன்று காலை 8 மணிமுதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது. கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் அனுமதி இல்லை. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம் எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம். அண்ணாசாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம். சவுத்கொனல் ரோட்டில் இருந்து காந்தி சாலை நோக்கி வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. நகரம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நேரு உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 1.30 மணி அளவில் பிரதமர் கேரளா புறப்படுகிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது கூட்டணி , சசிகலா விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படலாம் என தெரிகிறது. பாஜக நிர்வாகிகளை பிரதமர் சந்திப்பாரா என்ற விவரம் உறுதியாகவில்லை. எனினும் பிரதமர் மோடியின் இந்த 3 மணி நேர பயணம் அதிமுக – பாஜகவின் தேர்தல் கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என சொல்லப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *