சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கருமந்துறை மலைப்பகுதிகளில் மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கருமந்துறை மலைப்பகுதிகளில் மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் பழங்குடியினர் நலன் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் சேலம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்தவும் வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும்,மலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த முடியும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சின்ன கல்ராயன் மலை ஊராட்சி, கருமந்துறை மணியார் குண்டம் பகுதியில், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செம்பருத்தி மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் மாட்டு சாணத்தைக் கொண்டு இயற்கை முறையில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வரும் பணியினை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இதுபோன்று, அப்பகுதியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்னகல்ராயன் கிராம பகுதியில் உள்ள கைக்கான்வளவு காட்ட ஆற்றின் உபரி நீர் வீணாகாமல் தடுத்து கரிய கோவில் அணைக்கு திருப்பும் திட்டத்திற்கு, தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு ரூபாய் 7.30 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் இயக்குனர் /திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் துரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் திருமதி. சுகந்தி பரிமளம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கராஜன், ஒன்றிய பொருளாளர் திருமதி. சுஜிதா, உதவி பொறியாளர் துரைச்சாமி உட்பட தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.