4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை அரசுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் கண்டனம் சென்னை: அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கச்சத்தீவு பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது , இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி, விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தங்கள் வாழ்வாதாரத்துக் காகவும், மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது. தொடர் கதையாக நடக்கும் இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பாஜக அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் தொழிலையும், உரிமை மற்றும் உடைமைகளையும் பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். எனவும் தெரிவித்தார்