தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்:-
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அமைத்துள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த அலுவலர்களுடன், பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகள் குறித்து, விரிவாக ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது,
உலகின் பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் நோய் தற்பொழுது வரத்தொடங்கி உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய் வராமல் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் தடுத்திட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் AVIAN INFLUENZA மற்றும் BIRD FLU வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.