சென்னிமலையில் நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
![]()
சென்னிமலையில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ஈரோடு ஆக.8:
12-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, நெசவாளர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் கைத்தறித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சென்னிமலையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கைத்தறித்துறை சார்பில் நடைபெற்ற இம்முகாம், சென்னிமலை பகுதியில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முகாமில் கைத்தறித்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, காது–மூக்கு–தொண்டை பரிசோதனை, பல்வேறு பறிசோதனைகள், எலும்பு பரிசோதனை, இதய பரிசோதனை, சித்த மருத்துவம், மகளிர் மருத்துவம், காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நோய்களின் தன்மைக்கு ஏற்ப இலவசமாக இ.சி.ஜி., ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சென்னிமலை பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, கைத்தறி தின விழாவையொட்டி சென்னிமலையில் உள்ள முகாசிபுதூர் மற்றும் மேலப்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் கைத்தறித்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

