தோல்வி என்பது முடிவல்லவெற்றிக்கான அடுத்த படியே
![]()
தோல்வி என்பது முடிவல்ல… வெற்றிக்கான அடுத்த படியே!” 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டாக்டர் ஆ.ஹென்றியின் உணர்வுபூர்வ ஊக்க வாழ்த்து
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், இன்று வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முன்னிட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் முக்கியமான உணர்வுபூர்வமான வாழ்த்துச் செய்தியையும் விழிப்புணர்வு கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பகலிரவில்லா உழைப்பு, பெற்றோரின் தியாகம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, உங்கள் எதிர்கால கல்விப் பயணத்திற்கான வலிமையான அடித்தளமாக அமையட்டும்.
ஆனால்… இந்தத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாத மாணவர்களே, தயவுசெய்து மனம் உடைய வேண்டாம்! ஒரு தேர்வின் முடிவு உங்கள் வாழ்க்கையின் முடிவு அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும்பாலான மனிதர்கள் கூட, ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்தவர்களே என்பதை மறந்துவிடாதீர்கள்.
தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக தங்களைத் தாங்களே குறைத்து எண்ண வேண்டாம்.ஒரு மதிப்பெண் உங்கள் திறமையை அளவிட முடியாது. ஒரு தேர்வு உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. உடனடியாக நடைபெறவுள்ள மறுதேர்வில் தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டு, இன்னும் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெற இப்போதே எனது ‘அட்வான்ஸ்’ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
.பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு முக்கிய வேண்டுகோள். தேர்வு முடிவுகள் வரும் காலங்களில் மாணவர்களின் மனநிலை மிகவும் மென்மையானது. திட்டாதீர்கள்… தாங்குங்கள். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு அனுபவம்” என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். பயமுறுத்தாதீர்கள். நம்பிக்கை கொடுங்கள் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியமே அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.
மேலும் பக்கத்து வீட்டுப் பையனோ அல்லது உறவினரோ எடுத்த மதிப்பெண்ணுடன் உங்கள் குழந்தையை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான திறமையைக் கொண்டது. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதை விட, உங்கள் குழந்தையின் உயிரும் மனநலமும் கோடிக்கணக்கான மடங்கு மதிப்புடையது.
சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள். “தோல்வி அடைந்த மாணவர்களைக் கேள்விகளால் துளைக்காதீர்கள். அவர்களுக்குத் தேவை இப்போது விசாரணைகள் அல்ல, அரவணைப்பு மட்டுமே.” தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதிதான். விழுந்தவர்களைக் கைதூக்கி விடுவதே ஒரு சிறந்த குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அழகு. உங்கள் அன்பு மட்டுமே அவர்களை மீண்டும் சாதிக்க வைக்கும்
.இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் அறிவுச் சொத்துகள். எனவே அவர்களை மதிப்பெண்களால் அல்ல… மனிதநேயத்தால் மதிப்பிட வேண்டும். வெற்றி நமக்கு மகிழ்ச்சியைத் தரும், ஆனால் தோல்வி மட்டுமே அடுத்த முறை எப்படிச் செயல்பட வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத்தரும். தோல்வி என்பது தற்காலிகம். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை கொண்ட மனதை எந்த தோல்வியும் வீழ்த்த முடியாது. வாழ்க்கை என்பது இன்னும் எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்ட நீண்ட பயணம். மாணவர்களே நினைவில் கொள்ளுங்கள்:
“கல்வித் தேர்வின் வெற்றி – தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு அத்தியாயம் மட்டுமே, அதுவே இறுதி தீர்ப்பு அல்ல!” வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தகட்ட உயர்கல்வி மற்றும் சாதனைகளுக்குத் தயாராக வேண்டும். சிறு பின்னடைவை சந்தித்த மாணவர்கள், இன்னும் அதிக உற்சாகத்துடன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். நாளைய இந்தியாவை உருவாக்கப் போவது இன்றைய மாணவர்கள் தான். அறிவிலும், ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் முன்னுதாரணமாக திகழ அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என டாக்டர் ஆ.ஹென்றி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

