இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE Act) 

Loading

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாட்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE Act)  இன் படி 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைகான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்ப தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த முழுமையான தகவல்களை பெற்றோர்கள் அறிந்துகொண்டு பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு பதிவினை வெளியிட்டுள்ளார்.

நமது நாட்டில் தரமான கல்வி என்பது பணம் உள்ளவருக்கு மட்டும் என்கின்ற சூழலை மாற்றும் பொருட்டு பொருளாதார ரீதியாகவும் மற்றும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரிவினர்கள் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 (RTE) படி அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீதம் இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மைய – மாநில அரசுகளின் நிதி (பங்களிப்புடன்) உதவியுடன் மைய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% நிதி என்கின்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்வதால், ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.

எனவே தற்பொழுது 2026-27 கல்வியாண்டிற்க்கான RTE மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் RTE சேர்க்கைக்கு தகுதியுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விண்ணப்பங்களை ஏப்ரல் 20, 2026 முதல் மே 18, 2026 அன்று மாலை 5 மணி வரை rte.tnschools.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட வகையில் இணையதளத்தில் விண்ணப்பிப்பது குறித்து புரிதல் இல்லாத மற்றும் விண்ணப்பிக்க வசதி இல்லாத பெற்றோர்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (DEO Office) மற்றும் வட்டார வள மையங்களை (BRC)  அணுகி விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய குறிப்பு:

 ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகள்எச்.ஐ.வி (HIV)-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், ஒற்றை பெற்றோர் (Single parent) மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், இவர்களுக்குக் குலுக்கல் முறைக்கு முன்பாகவே இடங்கள் ஒதுக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

விண்ணப்பிக்க தகுதி:

ü  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் குழந்தை வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளி ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.

ü  வயது வரம்பு எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் ஆகஸ்ட் 1, 2022 முதல் ஜூலை 31, 2023-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

ü  ஒருவேளை பள்ளி படிப்பை நேரடியாக முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கினால், அந்தப் பள்ளிக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் ஆகஸ்ட் 1, 2019 முதல் ஜூலை 31, 2020-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

ü  வயது வரம்பை உறுதி செய்யப் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனை பதிவேடுகள் அல்லது அங்கன்வாடி பதிவேடுகள் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

ü  குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு அங்கீகரித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

ü  நலிவடைந்த பிரிவினர் என்ற அடிப்படையில் விண்ணப்பிப்போர், தங்கள் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறைவாக உள்ளதை உறுதி செய்ய வட்டாட்சியரிடம் பெற்ற வருமானச் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.

ü  பின்தங்கிய (Backward) மற்றும் தாழ்த்தப்பட்ட (SC/ST) கீழ் வரும் குழந்தைகள் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வரும் மே 19, 2026– ஆம் தேதிக்குள் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களால் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை  (EMIS – Education Management Information System இணையதளம் வழியாகச் சரிபார்க்கப்பட்டு தகுதியான ஆவணங்கள், தகுதியற்றது மற்றும் விடுபட்டுள்ள ஆவணங்கள் என வகைப்படுத்தப்பட்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் ‘தகுதியானது’ என்றும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ‘தகுதியற்றது’ அல்லது ‘ஆவணங்கள் விடுபட்டுள்ளன’ என்றும் குறிப்பிடப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவல்கள் பெற்றோர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு உடனடியாக குறுஞ்செய்தி வழியாக தகவல் அனுப்பப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல்           மே 20,2026 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். ஒரு பள்ளியில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 22, 2026 அன்று சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் பள்ளியின் முதல்வர்க‌ள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7.4.2026 ஆம் தேதி அன்று 12(1) (சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், 15.4.2026 ஆம் தேதி அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் tnemis.tnschools.gov.in வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பெற்றோர்கள் மேற்கண்ட 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கைகான தகவல்களை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு முறையாக தங்கள் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை உரிய முறையில் விண்ணப்பித்து பயன் பெற்றிட வேண்டுமென அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பாக கேட்டுக் கொள்வதாக டாக்டர்.ஆ.ஹென்றி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

0Shares