ஈகைத்   திருநாளாம் ரமலான் பெருநாள் நல்வாழ்த்து

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர்  டாக்டர்.ஆ.ஹென்றி, உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ஈகைத்   திருநாளாம் ரமலான் பெருநாள் ல்வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்..                           

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் சங்கை மிகு மாதமாகும். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் மாதத்தில் மூன்றாவது கடமையான நோன்பு மற்றும் நான்காவது கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதும், இறைமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவில் தொழும் தொழுகையானது ஆயிரம் மாதங்கள் தொழும் தொழுகையில் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மையை தர கூடிய கண்ணியமிக்க இரவாகவும், இம்மாதம் முழுவதும் இறைவனின் அருள் வேண்டி இரவு நேர சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகை நடைபெறுவதும், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டும். வழி கெடுக்கும் சைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டும். யுத்தங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட மாதமாகும். இம்மாதத்தில் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நட்பை பேணி – உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் மாதம் என பல்வேறு சிறப்புகளை பெற்றது  இந்த புனித ரமலான் மாதம் ஆகும்

இஸ்லாமியர்களின் மூன்றாவது கடமையான நோன்பு அதிகாலை முதல் அந்தி சாயும் வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்து, பசியினை உணர்ந்து, இறைவனை அதிகம் வழிபட்டு, இறைமறை திருக்குர்ஆனை அதிகம் ஓதி, நன்மைகளை நாடி, தான தர்மங்கள் செய்து, இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரி  பிரார்த்தித்து, வீண் பேச்சு, சண்டை, கோபம், புறம் மற்றும் பொய் பேசுதல், பாலியல் உறவுகளை தவிர்த்து,  நற்காரியங்கள் புரிந்து அந்தி சாயும் பொழுது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் சேர்ந்து இறையில்லாமான மசூதிகள் மற்றும் இல்லங்களில்  பேரிச்சம்பழம், தண்ணீர், நோன்பு கஞ்சி ‌கொண்டு நோன்பினை (இஃப்தார்) திறக்கின்றனர். மருத்துவரீதியாகவும் நோன்பு வைப்பது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் இஸ்லாமிய மக்கள் நோன்பு திறப்பதற்கு சாதி – மதம் – இனம் – மொழி – அரசியல் என அனைத்தையும் கடந்து மனிதநேயத்தை போற்றிடும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி நோன்பாளிகளை கண்ணியப்படுத்திட நடத்திடும் இஃப்தார் நிகழ்ச்சியாகும்.

இஸ்லாமியர்களின் நான்காவது கடமை ஜகாத் ஆகும். இஸ்லாத்தில் இறை வணக்கம் (தொழுகை) எவ்வளவு முக்கியமோ அதே போல் ஜகாத் என்பதும் மிக முக்கியமானது. ஜகாத்தின் முக்கிய நோக்கமானது ஏழை எளியோர்களுக்கு உதவுதல் மற்றும் நம்மிடம் உள்ள செல்வங்களை தூய்மைபடுத்துவது என்கின்ற  பொருளின் அடிப்படையில். ஜகாத்தின் சிறப்பை சொல்வது என்றால் “தண்ணீர் நெருப்பை அணைப்பது போல செய்யும் தர்மமானது பாவத்தை அழித்துவிடும்” இத்தகைய சிறப்புமிகு ஜகாத்தை, முஸ்லிம்கள் அனைவரும் தங்களிடம் உள்ள சொத்துக்களில் 2.5% சதவீதம் ஜகாத் (தானமாக) ஏழை எளிய மக்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் நலிந்த கல்வி நிறுவனங்களும் வழங்க வேண்டும். மேலும் ரமலான் மாதத்தின் இறுதியில் பெருநாள் (ஈத்) தொழுகைக்கு முன்பே ஃபித்ரா எனும் வாஜிபான தர்மம் செய்ய வேண்டியது ஒரு முக்கியமான தர்மச் செயல் ஆகும்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ரமலான் மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் மேற்கண்ட முறையில் ரமலான் நோன்பினை கடைப்பிடித்து, தங்களின் கடமைகளை நிறைவேற்றி தங்களின் வாழ்வியலில் தங்களை புதிய மனிதர்களாக  மாற்றி அமைத்து பொறுமை, சுய ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும்  மறுமை நாள் குறித்த எண்ணங்களை மனதில் சுமந்து பிறை கண்டு  ரமலான் பெருநாளை குடும்பத்தினர் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்  என அனைவரும் ஒன்று கூடி, புத்தாடை அணிந்து, விதவிதமான உணவுகளை உண்டு, ஆடி பாடி மகிழ்வுடன் ஆரத்தழுவி மனிதம் ஒன்றே சிறந்தது என்ற ஒற்றை சிந்தனையில், ரமலான் பெருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன் என்றாலும்,

தற்பொழுது உலகில் சில நாடுகளில் நடைபெற்று வரும் யுத்தத்தின் கோர பிடியில் அந்நாட்டு மக்கள் சிக்கி நித்தமும் வெடிகுண்டுகள் வெடித்து சிதற, உயிர் பலிகள் உயர்ந்திட, வீடு, மருத்துவம், கல்வி, தொழில் என அனைத்து அடிப்படை வசதிகளும் தகர்க்கப்பட்டு, ‌ இருக்க இடம், உண்ண உணவு,  உடுக்க உடையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தங்களை காத்துக் கொள்ள குடும்ப உறவுகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என உறவுகளை பிரிந்து வேதனையுடன் அகதிகளாய் நாடு  கடப்பவர்களையும்,  பிறந்த தனது தாய் நாட்டினை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் வாழ்வோ, சாவோ எனது தாய் மண்ணில்தான் என உள்ளத்தில் உறுதியுடன் தங்கள் நாட்டிலேயே அனைத்து வேதனைகளையும், வலிகளையும்  தாங்கி கொண்டு சொல்லொண்ணா துயரத்துடன் பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை உயிருக்கு அஞ்சி கண்ணீருடனும். அச்சத்துடனும் வாழ்ந்து வரும் நிலையை எண்ணி மனம் கலங்குகிறது.

ஆகவே இச்சிறப்புமிகு ரமலான் பெருநாளின் சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்லாது சாதி, மதம், இனம், மொழி, அரசியல் மற்றும் நாட்டின் எல்லைகளை கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மனிதம் காத்திட, யுத்தம் இல்லாத பூமி சத்தமில்லாமல் வேண்டும் என்கின்ற பாடல் வரி போல்  இப்பூமியில் நடைபெற்று வரும் யுத்தங்கள் நின்றிடமும், மனித இனத்தை அழிக்கின்ற ஆயுதங்கள் அழிந்து அன்பு பெருகிடவும், மனிதம் வளர்ந்திடவும், அனைவரும் அனைத்தும் பெற்று அமைதி மற்றும் மகிழ்வுடன் நாம் வாழ்ந்து வரும், அழகான பூமி பந்தினை  மேலும் அழகாக்கி நமது அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல உறுதி பூணுவோம். இச்சங்கை மிகு ரமலான் பெருநாளில் நம் அனைவரின் பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றிட பிரார்த்திப்போம் என டாக்டர்.ஆ.ஹென்றி, தமது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

0Shares