முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கஏற்பாடு

Loading

ஈரோடு
ஈரோட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு-மாவட்ட ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 11 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 73 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறப்பு திருத்தப் பணிகளுக்குப் பின் மாவட்டத்தில் மொத்தம் 17 லட்சத்து 40 ஆயிரத்து 222 வாக்காளர்கள் உள்ளதாகவும், புதிதாக வரப்பெற்ற 12 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் இல்லங்களிலிருந்தே வாக்களிக்க ஏதுவாக 12D படிவங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், ராணுவத்தினர் ஆன்லைன் மூலமும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தனியாக நிறுவப்பட்டுள்ள மையங்கள் மூலமும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த ‘வெப் காஸ்டிங்’ வசதி செய்யப்பட்டுள்ளதோடு, 8 பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 5 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 56 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் 20 லட்ச ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆட்சியர், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கும், தேர்தல் விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கும் போதிய பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
0Shares