ஆவண பதிவில் நிலவிவரும் பிரச்சனைக்கு தீர்வு?
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு பொது பாதை சம்பந்தப்பட்ட தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆவண பதிவில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உருவாக்கப்பட்டுள்ள மனை பிரிவுகளின் பின்பகுதியில் பொதுபாதையில்லாமல் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கான வேளாண்மை பயன்பாட்டிற்கு தேவையான உரங்கள், இடுபொருள்களை கொண்டு செல்வதற்கும் மற்றும் உற்பத்தியான பொருள்களை சந்தைப்படுத்திடுவதை எளிமையாக்கும் வகையில் பொதுப் பாதை அமைத்து அனைவரும் பயன் பெற்றிட வேண்டும் என்கின்ற பொதுநல நோக்கில் அப்பகுதிவாசிகள் சிலர் ஒன்றிணைந்து நிலத்தை வாங்கி, தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆக வழங்கிட விரும்பி சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகும் பொழுது, சம்பந்தப்பட்ட நிலம் DTCP-யின் அங்கீகாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் அரசாணையின் கீழ் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் தான பத்திரத்தை பதிவு செய்வதில் எவ்வித பிரச்சினையும் எழுவதில்லை.
அதேசமயம் சம்பந்தப்பட்ட நிலம் அங்கீகாரம் இல்லாமல் கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கும் பட்சத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்தும் (BDO), நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையரிடமிருந்தும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலரிடமிருந்தும் (EO), அதுபோல் தற்பொழுது புதியதாக இணைக்கப்பட்டுள்ள மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமிருந்து அனுமதி பெற்றிட வேண்டும் அல்லது தடையின்மை சான்று (NO OBJECTION CERTIFICATE) பெற்றிட வேண்டும் என்கின்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்துவதும் மேலும் பல்வேறு காரணங்களை தெரிவித்தும் சார் பதிவாளர்கள் பொதுப் பாதையாக்கான தான செட்டில்மெண்ட் (Gift Deed) ஆவணத்தை பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் மேற்கண்ட வகையில் தங்களது நிலத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆக வழங்க விரும்புவர்கள் ஆவணங்களை பதிவு செய்ய இயலாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட வகையில் பொது மக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான செட்டில்மெண்ட் (Gift Settlement Deed) ஆக வழங்க விரும்பும் நிலங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பொது பாதையாக கருதி ஆவணத்தை சார் பதிவாளர்கள் பதிவு செய்திடும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டுமென பொதுமக்களின் நலன் கருதி பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

