ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு :
திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கூறியதாவது : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி,. மதுரவாயல்,அம்பத்தூர்,மாதவரம் மற்றும்.திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி அறிவிப்பாணை வெளியிடும் நாள் வேட்புமனு தாக்கல் ஆரம்ப நாள் 30.03.2026 (திங்கள்),வேட்புமனு தாக்கல் இறுதி நாள் 06.04.2026 (திங்கள்),வேட்புமனு பரிசீலனை நாள் 07.04.2026 (செவ்வாய்),வேட்புமனு திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் 09.04.2026 (வியாழன்), தேர்தல் நாள் 23.04.2026 (வியாழன்),வாக்கு எண்ணிக்கை நாள் 04.05.2026 (திங்கள்),தேர்தல் நடத்தை விதி முடிவுறும் நாள் 06.05.2026 (புதன்)இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்படி தேர்தல் அறிவிப்பாணையை முன்னிட்டு, 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது. மேலும், திங்கள்தோறும் பெறப்படும் மக்கள் குறை தீர்வு நாள் நிகழ்ச்சி, மனு நீதி நாள் நிகழ்ச்சி உள்ள அனைத்து நலத்திட்டம் தொடர்பான நிகழ்வுகளும் மேற்குறிப்பிட்டபடி 06.05.2026 வரை நடத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும், தேர்தல் தொடர்பான கீழ்க்காணும் புகார்களுக்கு ஊரக பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் அனுமதி பெறாமல் செய்யப்பட்ட சுவர் விளம்பரங்கள், மாநகரம் / நகராட்சி /பேரூராட்சி பகுதிகளில் உள்ள சுவர் விளம்பரம், வாக்காளர்களை கவரும் வகையில் பொருட்கள், பணம், மதுவகைகள் விநியோகம் செய்தல் மற்றும் ஆயுதம் கொண்டு மிரட்டுதல், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்க்காக பணம் கொண்டு செல்வது தொடர்பாக புகார்கள், வேட்பாளர்களின் தேர்தல் செலவின புகார்கள்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24X7 கட்டுப்பாட்டு அறைக்கு இலவச தொலைபேசியில் 1800 425 8515 மற்றும் 7305158550 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்கலாம். மேலும், மேற்கண்ட புகார்களை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர் மூன்று நிலை கண்காணிப்பு குழுவினர் 8 மணி நேர சுழற்சி முறையில் பதினெட்டு (18) குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் தொடர்பான மேற்கண்ட புகார்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் 1346 வாக்குச்சாவடிஅமைவிடங்களில் 4005 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1544710, பெண் வாக்காளர்கள் 1612090, மூன்றாம் பாலினத்தவர்கள் 613 ஆக மொத்தம் 3159071 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், இத்தேர்தலில் 19220 வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnels),  7233 காவல்துறை பணியாளர்கள் (Police Personnels) மற்றும்  102 நுண்பார்வையாளர்கள் (Micro Observers) வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவிற்க்கிணங்க தேர்தல் பணிக்காக மத்திய காவல் ஆயுதப்படையினர் நான்கு கம்பெனி (coys) வரப்பெற்றுள்ளது. இதில்  288 ஆயுதப்படையினர் பதற்றமான பகுதி மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இத்தேர்தலில், வாக்காளர் / வாக்காளருக்கோ பணம், பொருள் பெறுவதோ / கொடுப்பதோ இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171B-ன் படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் 72 மணி நேரத்திற்குள் அகற்றப்படவேண்டும். மேலும், திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 469 படைக்கலன்களை (Licenced Arms)   உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க படைக்கலன் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இத்தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கூறினார்.இச்செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ.ஸ்ரீராம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares