நலத்திட்ட பணிகள் ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு

Loading

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்து பார்வையிட்டு, மருத்துவமனையில் உள்ள மருத்துவ நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் 2000 மீ நீள சாலை அமைக்கும் பணிகளையும், ஆண்டார்குப்பம் ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் நவீன நூலக மேம்படுத்துதல் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள நூலகத்தையும், பஞ்சட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு சமுதாய கூடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வடக்குநல்லூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 73 வீடுகளின் கட்டுமான பணிகளையும், ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும், சோழவரம் ஊராட்சி ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 58 வீடுகளின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
இறுதியாக, சோழவரம் ஊராட்சி ஒன்றியம், சோழவரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்டத்தின் முதல் பசுமை புத்தாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
0Shares