பாலியல் வன்புணர்வு செய்த பூசாரிக்கு10ஆண்டுசிறை
![]()
எண்ணூரில் 5 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த பூசாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு :
திருவள்ளூர் மார்ச் 05 : சென்னை, எண்ணுார் பகுதியைச் சேர்ந்த 5 வயது பள்ளி சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஞாயிறு விடுமுறை தினத்தன்று காலை அப்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் முருகன் கோவில் அருகே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திருமணமாகாத கோயில் பூசாரி ராஜன் (70). என்பவர் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சிறுமியை கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததால் பெற்றோர்கள் எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூசாரி மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
அதில் 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி, அமர்வு முன்பு இன்று வந்தது . சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது சாட்சிகளின் அடிப்படையிலும் மருத்துவ ஆவணங்கள் அடிப்படையிலும் உறுதியானதால் கோயில் பூசாரி ராஜனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப்பின் புழல் சிறையில் அடைத்தனர்.

