தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்தது

Loading

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்தது
43 பயணிகள் உயிர் தப்பினர் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
உளுந்தூர்பேட்டை மார்ச் 2
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேநீருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் பயணம் செய்த 43 பயணிகள் முன்கூட்டியே இறங்கி உணவகத்திற்குச் சென்றிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்செங்கோடு பகுதியில் இருந்து 43 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தூத்துக்குடி மாவட்டம் எரல் பகுதியைச் சேர்ந்த சரவணன் 46 என்பவர் ஓட்டி வந்தார்.
பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் பகுதியில் ஜி.எஸ்.டி சாலை ஓரத்தில் அமைந்திருந்த தனியார் உணவகத்தில் தேநீருக்காக நிறுத்தப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி உணவகத்திற்குச் சென்றனர்.
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சில நிமிடங்களில் தீ வேகமாக பரவி, பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையம் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீச்சடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தில் பேருந்தின் பின்பகுதி பெருமளவில் சேதமடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் முன்கூட்டியே இறங்கி உணவகத்திற்குச் சென்றிருந்ததால் உயிரிழப்பு  காயம் ஏதும் ஏற்படவில்லை.
உணவக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தீ விபத்திற்கான காரணம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares