தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி ஒருங்கிணைப்பு

Loading

தமிழ்நாடு அனைத்து பழங்குடியினர் (மலையாளி) ஒருங்கிணைப்பு கூட்டம்
சேலம்.பிப்.24
சேலம் ரோட்டரி கிளப்பில், தமிழ்நாடு அனைத்து பழங்குடியினர் ஒருங்கிணைப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 37 பிரிவு பழங்குடியின மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாபெரும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பழங்குடியின சமூகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செட்யூல்ட் டிரைப் (மலையாளி) பேரவை மாநிலத் தலைவர் கோவிந்தன், பொதுச் செயலாளர் மோகன், ஆர்வாஸ் தலைவர் (தோடர்) PVTG – நீலகிரி, செயலாளர் புஷ்பகுமார் (கோத்தர்) PVTG – நீலகிரி, ஆதிவாசி கூட்டமைப்பு – திருவள்ளூர் தலைவர் குணசேகரன் (இருளர்), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத் தலைவர் மணி (ஆல்குறும்பர்), தலைவர் சண்முகம் (கோத்தர்), ஒருங்கிணைப்பாளர் சுஜாதா (காட்டுநாயக்கன்), மலசர் சமுதாயத் தலைவர் பத்மா (வால்பாறை – ஆனைமலை) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தின் போது, பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, நில உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அனைத்து பழங்குடியின சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து பழங்குடியினர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வரவேற்புரையை TNST(M)P சேலம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் வழங்கினார். மாநிலத் தலைவர் கோவிந்தன் தலைமை உரையாற்றி, ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பொதுச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் நிறைவாக, செயலாளர் சின்னசாமி நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
0Shares