கீழ்நல்லாத்தூர்சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
![]()
கீழ்நல்லாத்தூரில் சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்துறையை கண்டித்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் பாரதி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள டிஎம்ஐ ஜோசப் என்ற தனியார் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நான்காம் ஆண்டு பயின்ற மாணவி பாரதியை பிரிவு மாற்றுவதில் பிரச்சினை எனக்கூறி தனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்துச் சென்று பிரிவை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் வகுப்பை மாற்ற மறுத்ததால் மகளுக்கு டீசி வழங்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் டிசி வேண்டுமென்றால் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே டி சி கொடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் அறையில் திடீரென தூக்கிட்டு கொண்டார். இதனால் தனது மகள் உயிரிழப்பிற்கு கல்லூரி நிர்வா கமே பொறுப்பு என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாய் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து மணவாள நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சப் இன்ஸ்பெக்டராக இருந்த மாலா என்பவர் மாணவியின் பையில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மகளின் செல்போனை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. தேர்வின் போது மகள் பிட் அடித்ததாக கூறி சக மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் ஆடையை கலைந்து சோதனை செய்ததாகவும், இதனால் தான் மன உளைச்சலில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கல்லூரி நிர்வாகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவி பாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் காவல் துறையை கண்டித்து மணவாளநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், புகார் கொடுத்தால் நடவடி்ககை எடுக்கப்படும் எனக்கூறி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
மகளின் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,நீதி கிடைக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

