குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு :
திருவள்ளூர் பிப் 21 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலரும் முதன்மைச் செயலாளருமான கோ.பிரகாஷ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர்
அப்போது, குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி,வேலூர், காஞ்சிபுரம் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் 70 பேருந்துகளும், தனியார் பேருந்துகள் 30, மாநகர போக்குவரத்து பேருந்துகள் 30, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தங்குமிடம், கடைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்), குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளுடன் மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளையும் பார்வையிட்டனர். அதையடுத்து, விரைவில் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளதால், இறுதி கட்ட பணிகளை விரைவில் முடிக்கவும் ஒப்பந்தகாரர்களை வலியுறுத்தினர்.
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து முனையம் அமைத்து பயன்பாட்டில் உள்ளது. இப்பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது 90 சதவீதம் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், 10 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருவதால் வாகன நெருக்கடி வெகுவாக குறைந்துள்ளது.
இதற்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இங்கு ரூ.336 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தளத்துடன் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு பேருந்து நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலையில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு. குத்தம்பாக்கம் பேருந்து முனைய தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர்.பிரின்ஸிலி ராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.