வெங்கடேசபெருமாள்கோவில்கும்பாபிஷேகவெளியூர்பூசாரி

Loading

சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக வெளியூர் பூசாரி விவகாரம் குறித்து ஊர்மக்கள் மனு !
சேலம் பிப்.20
சேலம் அஸ்தம்பட்டி அருகே சின்னத்திருப்பதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகம் தொடர்பாக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், அய்யந்திருமாளிகை, கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி, கள்ளிக்காடு, மனக்காடு, குமாரசாமிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.
300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இந்த கோவில், தற்போது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 12-7-2000 மற்றும் 23-1-2013 ஆகிய தேதிகளில் ஸ்ரீபாஞ்சாராத்ர ஆகம முறையில் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ எஸ். சுதர்சன் பட்டாச்சார் நித்திய பூஜை, மாதாந்திர, வருடாந்திர மற்றும் பிரம்ம உற்சவங்கள் ஆகிய அனைத்தையும் ஸ்ரீபாஞ்சாராத்ர ஆகம முறையிலும் வடகலை சம்பிரதாயத்திலும் செய்து வருகிறார். மேலும் கடந்த 18 ஆண்டுகளாக திருக்கல்யாணம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகளையும் அவர் நடத்தி வருவதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலாலய பூஜையும் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தாலும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை. வரும் 8-3-2026 அன்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊர்மக்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கோவில் பூசாரி ரகுராமன் வெளியூரிலிருந்து நபர்களை அழைத்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்கிறார் எனவும், 18-2-2026 அன்று ரகுராமன், செயல் அலுவலர் ராஜத்திலகம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் சுதர்சன் பட்டாச்சாரை கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தபோது, மரியாதையற்ற முறையில் பதிலளிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக கோவிலில் பூஜை செய்து வரும் சுதர்சன் பட்டாச்சாரை புறக்கணித்து வெளியூர் நபர்களை கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான காரணம் விளக்கப்படவில்லை என்றும், இது பக்தர்களுக்கு திருப்தியளிக்காது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்தி, வெளியூர் நபர்களை கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முயன்றவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, சுதர்சன் பட்டாச்சாரை கொண்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares