பெயிண்டர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
![]()
ஸ்மைல் பவுண்டேஷன் – பெர்ஜர் பெயிண்ட்ஸ் இணைந்து
பெயிண்டர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு
‘ஐட்ரெய்ன் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தைத் துவக்கினர்
கோவையில் ஸ்மைல் பவுண்டேஷன் மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் இணைந்து பெயிண்டர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் வகையில் ‘ஐட்ரெய்ன் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தைத் துவக்கினர். இதில் பெயிண்டிங் தொழில் மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
பெயிண்டர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்பாட்டுத் திட்டத்தை கோவையில் ஸ்மைல் பவுண்டேஷன் மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் ஆகியவை இணைந்து ‘ஐட்ரெய்ன் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தைத் துவக்கி உள்ளனர்.
இத்திட்ட துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினர் பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அபிஜித் ராய் ரிப்பன் வெட்டி பயிற்சி வாகனத்தினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஸ்மைல் பவுண்டேஷனின் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான சாந்தனு மிஸ்ரா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றிவைத்தனர்.
இது தமிழ்நாட்டில் தொடங்கப்படும் இரண்டாவது திட்டமாகும். இந்த வாரத் தொடக்கத்தில், கர்நாடக மாநிலம் மைசூருவில் இதேபோன்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. அது கர்நாடகாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது திட்டமாகும்.
பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் ஆகியவை 2021ம் ஆண்டில் இந்த ‘ஐட்ரெய்ன் ஆன் வீல்ஸ்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தன. அமைப்புசாரா பெயிண்டர்களுக்கு அதாவது வீடுகளுக்கு பெயிண்ட் அடிப்பவர்களுக்கு நவீன வர்ணம் பூசும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் அவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளும், வருமானமும் கிடைக்கும்.
இப்பயிற்சி மையங்கள் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் இடங்களாகவும் உள்ளன. பெண்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள பெயிண்டர்களுக்கு இந்தத் திறன் பயிற்சியானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
‘ஐட்ரெய்ன் ஆன் வீல்ஸ்’ திட்டத்தின் மூலம் இதுவரை நாடு முழுவதும் 3 லட்சத்து 15 ஆயிரம் பெயிண்டர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், 51 பின்தங்கிய மாவட்டங்கள் உட்பட மொத்தம் 503 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.
ஒவ்வொரு ‘ஐட்ரெய்ன் ஆன் வீல்ஸ்’ நடமாடும் வாகனத்திலும் ஆடியோ-வீடியோ கருவிகள், செயல்முறைப் பயிற்சிக் கூடங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் உள்ளன. வர்ணம் பூசுவதை எப்படி மிகவும் திறமையாகவும், விரைவாகவும், சுத்தமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் செய்வது என்பதை இவை மூலம் விளக்க முடியும். ஒவ்வொரு திட்டத்திலும், தொழில் அறிவும் தொழில்நுட்பத் திறனும் கொண்ட அனுபவம் வாய்ந்த, சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் உள்னர்.
இப்பயிற்சி வகுப்புகளில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த எழுத்துப்பூர்வமான மற்றும் செயல்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவது, தொழில்முனைவோர் திறன்கள் மற்றும் மென்திறன்கள் குறித்தும் கற்றுத்தரப்படுகிறது. மரச் சாமான்களுக்கு பாலிஷ் போடுவது, அலங்காரப் பெயிண்டிங் குறித்தும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சியை பெயிண்டர்கள் தங்கள் வீடு அல்லது வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இந்த நவீனப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அபிஜித் ராய் கூறுகையில், “சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பெயிண்டர்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பதன் மூலம் அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்திற்கு நாங்கள் வித்திடுகிறோம். அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவுகிறோம். அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் நாங்களும் இருப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.
ஸ்மைல் பவுண்டேஷனின் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான சாந்தனு மிஸ்ரா கூறுகையில், “நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் திறன் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. இந்தியா முழுவதும் படிப்படியாக விரிவடைந்து வரும் இந்த தனித்துவமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
இந்தியா முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இந்த திட்டம், ஆண்டின் சிறந்த சமூகத் தொழில்முனைவோர் திட்டத்திற்கான விருதை சமீபத்தில் பெற்றது. சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய வர்த்தக சபை, பெங்கால் வர்த்தக மற்றும் தொழில் சபை, இந்தியன் பிசினஸ் விருது, பாரத் சிஎஸ்ஆர் & சஸ்டெய்னபிலிட்டி விருது மற்றும் இம்பாக்ட்ரூட்ஸ் விருது ஆகியவற்றையும் இத்திட்டம் வென்றுள்ளது.
இத்திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பயனாளிகளுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பிக்கை அதிகரித்தது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கை முறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பெர்ஜர் நிறுவனத்தின் புதிய 2 வகை பெயிண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பெயிண்டிங் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

