ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மகாசிவராத்திரி
![]()
புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி :
திருவள்ளூர் பிப் 19 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த உற்சவம், புட்லூர் அங்காளம்மன் கோவிலின் மிக முக்கியமான நிகழ்வாகும். மகா சிவராத்திரி நாளில் மதியம் தொடங்கி, அம்மன் சிம்ம வாகனத்தில் மயானக் கொள்ளைக்கு எழுந்தருள்வார். மயான கொள்ளைக்கு சில நாட்களுக்கு முன்பே பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவர்.
இக்கோவிலில் அம்மன் நிறைமாத கர்ப்பிணியாக, வாய் திறந்து, மல்லாந்த நிலையில், மிகவும் சக்திவாய்ந்த ரூபத்தில் அருள்பாலிக்கிறார். மயான கொள்ளை உற்சவத்தில் பங்கேற்று அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் மற்றும் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.இந்நிலையில் இந்த ஆண்டும் திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலில் 2026 -ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி பந்தக்கால் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சியும், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகமும், பொங்கலிட்டு படையல் இடுதல் நிகழ்ச்சியும், மகா ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு மகா சிவராத்திரி உற்சவம் மற்றும் வீதி உலாவும் நடைபெற்றது.இதனையடுத்து மயான உற்சவத்தை முன்னிட்டு மகா அபிஷேகமும், அன்னதானமும், அம்மன் மயான கொள்ளை சூறை வைபவ உற்சவமும், அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்பொழுது அம்மன் மயானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.அப்பொழுது காப்பு கட்டி விரதமிருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மன் மயானத்தில் கொள்ளையடிக்கும் காட்சி வெகு விமர்சையாக நடந்தேறியது. தொடர்ந்து பொங்கலிட்டு படையலிடுதல் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருவள்ளூர், செவ்வாப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

