டெல்லியில் தமிழகக் காவலர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக புகார்
![]()
டெல்லியில் தமிழகக் காவலர்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகப் புகார்: நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்குக் காவலர் கோரிக்கை
ஈரோடு: டெல்லியில் பணியாற்றும் தமிழகக் காவல்துறையினர் போதிய ஓய்வின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாகவும், இது குறித்துப் புகார் அளித்ததால் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.குமார். தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் தலைமை காவலரான இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து டெல்லிக்குச் சிறப்புப் பணிக்காக அனுப்பப்பட்டார்.
அங்குள்ள புகழ்பெற்ற திகார் சிறையில் பாதுகாப்புப் பணி மற்றும் குழலூதும் பிரிவில் இவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்த அவர் அளித்த புகாரில், டெல்லியில் பணியாற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழகக் காவலர்கள் மிக மோசமான சூழலில் பணிபுரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான பணிச்சுமை, போதிய ஓய்வின்மை ஆகியவற்றால் காவலர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாகவும், இது குறித்துத் தனது மனைவி சாந்தா தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத்திடம் புகார் அளித்ததால் அங்கிருந்த உயர் அதிகாரிகள் ஆத்திரமடைந்து தங்களைத் துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கமெண்டன்ட் தரப்பிலிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகத் தான் அங்கிருந்து பெங்களூர் வழியாகத் தப்பித்துத் தனது சொந்த ஊரான கொடுமுடிக்கு வந்ததாகக் குமார் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, டெல்லியில் பணிபுரியும் தமிழகக் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

