மகளிர்களைதாக்கும்புற்றுநோய்விழிப்புணர்வுநிகழ்ச்சி

Loading

கூடலூர்
பந்தலூர் ஏகல் மகளிர் தையல் பயிற்சி மையத்தில் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மகளிர்களை தாக்கும் புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,  தையல் பயிற்சி மைய ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் மரு.கதிரவன் பேசும்போது தொற்றா நோய்கள் மூலம் அதிகம் இறப்புகள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வு இன்மையும், அலட்சியமும், நமக்கு வராது அதீத நம்பிக்கையும் தான். இதுவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் என்பது உடலில் நகம் முடி தவிர்த்து அனைத்து பகுதிகளில் வரும் வாய்ப்பு உள்ளது. மரபு சார்ந்து மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உணவு பழக்கம் ஆகியன சார்பில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். புகையிலை பழக்கம் மூலம் வாய், தொண்டை, வயிறு, பெருங்குடல், சிறுகுடல் போன்றவையில் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்,  மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்டவை அதிகம் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் குறித்து பெண் மருத்துவர் மற்றும் தொற்றா நோய் கண்காணிக்கும் செவிலியர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
தற்போது தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கும் நோக்கில்
14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நீலகிரியில் விரைவில் துவங்குகிறது. இதன் மூலம் வருங்காலங்களில் புற்றுநோய் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க முடியும். எனவே இதனை அனைவரும் தயக்கம் இன்றி போட்டு கொள்ள வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது புற்றுநோய் வர உணவில் சேர்க்கும் இரசாயன சேர்மங்களும் காரணமாக அமைகிறது எனவே கடைகளில் வாங்கும் மசாலா பொருட்கள், குளிர்பானங்கள், உடனடி உணவுகள் உள்ளிட்டவை  தவிர்க்க வேண்டும். பூண்டு, இஞ்சி உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares