பிரம்மாண்ட108சமஷ்டி ஸ்ரீஹனுமன் சாலிஸா ஹோமம்
![]()
கோவை
கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பாக, பிரம்மாண்ட ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ கோவை வடவள்ளியில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்!
சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ‘சின்மய அமிர்த மஹோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பில் ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ என்ற உலகளாவிய கூட்டு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற உள்ளது. உடல் நலன், உள்ளத் தூய்மை மற்றும் உலக நன்மை ஆகிய உயரிய நோக்கங்களுடன் நடத்தப்படும் இந்த ஆன்மிக நிகழ்வு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது சின்மயா கார்டன் அறக்கட்டளையின் தலைவர், சுவாமினி சம்பிரதிஷ்டானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது
சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், ஹனுமானை வழிபடும் இந்த கூட்டு ஹோமம் நடத்தப்படுகிறது. ஹனுமன் சாலிஸா எனும் சக்தி வாய்ந்த நூலில் உள்ள மந்திரங்களை உச்சரித்து அக்னி பகவானுக்கு சமர்ப்பிப்பதே இந்த ஹோமத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஹோமத்தின் சிறப்பு என்னவென்றால் பங்கேற்பாளர்கள் தங்களது கைகளாலேயே ஹோமத்தில் யாகம் செய்வதாகும், காலை 5 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 7 முறை ஹனுமன் சாலிஸா மந்திரங்கள் உச்சரிக்கப்படும். ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை உச்சரிப்பதால் ஹனுமன் சூரிய பகவானின் சீடன் மற்றும் ஸ்ரீ ராமபிரானின் பக்தனான ஸ்ரீ ஹனுமனின் பேரருள் பெற முடியும். இந்த நிகழ்வில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த பிரம்மாண்ட ஆன்மிக நிகழ்வு சிவராத்திரி அன்று பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, கோவை வடவள்ளியில் உள்ள மருதம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
பிரார்த்தனையில் பங்கேற்க எந்த கட்டணமும் அல்லது முன்பதிவும் தேவையில்லை. ஆனால் ஹோமத்தில் நேரடியாக பங்குபெற விரும்புபவர்களுக்கு மட்டும் முன்பதிவு அவசியமாகும். மொத்தம் 108 ஹோம குண்டங்களில், 600 முதல் 650 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். தனிநபராகவோ அல்லது குழுவாகவோ ஹோமத்தில் பங்கு பெறலாம் என்றார்.
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சின்மயா கமிட்டி உறுப்பினர் வெங்கட கிருஷ்ணன், சின்மயா கார்டன் அறக்கட்டளை செயலாளர் ராமகிருஷ்ணன், சின்மயா மிஷன் ஆச்சார்யா கிருஷ்ண சைதன்யா, சின்மயா கார்டன் டிரஸ்ட் தலைவி சங்கீதா வாரியர், அறங்காவலர் வேணுகோபால், பொருளாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

