தூய்மைபணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
![]()
போளிவாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 11 : திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து மாநில அளவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் விரிவாக்க உணவு திட்டத்தை தொடங்கி வைத்து வெப்பக் காப்பு பையில் வைத்த உணவு கலன்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, சுயமாக தொழில் தொடங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோர் திட்டம் மூலம் மானியக் கடனுதவி, குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். அதற்கு முன்னதாக, தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவைகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். சந்திரன், வி.ஜி. ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், சுதர்சனம், கிருஷ்ணசாமி, கணபதி, துரை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் எம்.பிரதீப் குமார், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, ஆட்சியர் மு.பிரதாப், தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

