பழங்குடிமக்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிமறுப்பு

Loading

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பழங்குடி மக்களிடம் பாகுபாட்டுடன் நடந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு : 200க்கும் மேற்பட்டவர்கள் கைது :

திருவள்ளூர் பிப் 09 : தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில்,  பல்வேறு கிராமங்களில் ஆற்றங்கரை, ஏரிக்கரை, குளக்கரைகளில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த 240 குடும்பங்களுக்கு தொடுகாடு ஊராட்சியில் பட்டா வழங்கப்பட்டது.

இதில் 110 குடும்பங்களுக்கு 2022-23 ஆம் ஆண்டு தொடுகாடு கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஒரு தொகுப்பு வீட்டிற்கு ரூ.4 லட்சத்து, 37 ஆயிரதது 430 ஒதுக்கீடு செய்து,  தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. பருவமழைக்கும் முன்பே தொகுப்பு வீடுகள் திறப்பு விழா காண வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் காலத்தாமதத்துடன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடுகாடு ஊராட்சிக்கு பொங்கல் அன்று காலை அரசு அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.
அப்போது 10 பானைகளில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இதில்  ஒரு பொங்கல் பானை அருகில் கூட பழங்குடி பெண்களை நிற்க அனுமதிக்காமல்,  தள்ளியே நிற்க வைத்துள்ளனர். வெளியிலிருந்து மகளிர் குழு பெண்களை அழைத்து வந்து சமத்துவ பொங்கலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் பழங்குடி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பழங்குடியின மக்களின் வீடுகளை ரிப்பன் கட்டி திறப்பு விழா நடத்தாமல் உதாசீனப்படுத்தியதாலும், சாதியின் பெயரில் இருக்கும் தெருக்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தும்,தொடுகாட்டில் இருளர் காலனி என சாதி பெயரை எழுதி வைத்துள்ளதாகவும் இதனால் ஆட்சியர் மீது தமிழ்நாடு அரசு உரிய எடுக்க வேண்டும் என்றும் பழங்குடி இருளர் இன மக்களின் சங்க தலைவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி கடிதம் அளித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் நகர காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்த பழங்குடியின இருளர் மக்கள்  ஒன்று கூடினர். உடனே காவல்துறையினர் ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என அராஜகமாக அனைவரையும் கைது செய்தனர். இதனால் ரயில் நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.
0Shares