கொசவன்பாளையத்தில் உள்ள திரிசூலினி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் :
திருவள்ளூர் பிப் 09 : திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அடுத்த கொசவன்பாளையம் என்.எஸ்.கே நகரில் உள்ளது ஓம் ஸ்ரீ சாந்த ஸ்வரூபினி திரிசூலினி அங்காள பரமேஸ்வரி ஆலயம். வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தரவல்ல இந்த ஆலயத்தில் ஆதி சூலசக்தி, ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர், ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத சி காசி விசுவநாதர், சனீஸ்வரர், பால் முனீஸ்வரர், பாவாடைராயன், மகேஸ்வரி, வைஷ்ணவி, விஷ்ணு துர்க்கை, கற்பகாம்பாள், சப்த கன்னி, அன்னபூரணி, தக்ஷிணாமூர்த்தி, பிரத்தியங்கரா, வாராகி, ஆதிசேஷன் நாகர், 3 நாகர்கள், நவகிரகம், காலபைரவர், சாய்பாபா ஆகிய தெய்வங்களுக்கு சாஸ்திரம் முறைப்படி மூன்று நிலைகளையும் பஞ்சவர்ணமும் கொண்ட நூதன ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக 4-ஆம் தேதி மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ- பூஜை, புதிய மூர்த்திகள் கரிக்கோலம், கண் திறத்தல் நிகழ்ச்சியும் முதற் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து நேற்று ஐந்தாம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாக பூஜையும், 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனையும், கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் 9.20 மணிக்கு விமானம், ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து ஓம் ஸ்ரீ சாந்த ஸ்வரூபினி திரிசூலினி அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் கொசவம்பாளையம், திருநின்றவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பி கணேஷ் குமார் சிறப்பாக செய்திருந்தார். இதில் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.