பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம்
![]()
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.62.82 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.62.82 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.5478 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீடு, ரூ.62.82 கோடி ஆகும். இத்திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் பங்களிப்பு ரூ.56.97 கோடி தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் பங்களிப்பு ரூ. 3.81 கோடி மூல தன மானிய நிதி ரூ. 804 கோடி ஆகியவற்றைக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. பொன்னேரி நகராட்சி வார்டு எண் 6 முதல் 27 முடிய 22 வார்டுகளில் பயன்பெறும் தற்போதைய (2018) இடைநிலை (2033) மற்றும் உச்சகட்ட (2048) ஆண்டு மக்கள் தொகை முறையே 38,800, 56,700 மற்றும் 82,800 என்ற அடிப்படையில் அதற்கேற்ப வெளியேற்றப்படும் கழிவுநீர் அளவு நாளொன்றுக்கு முறையே 4.48 மில்லியன் லிட்டர் 6.62 மில்லியன் லிட்டர் மற்றும் 9.52 மில்லியன் லிட்டர் என கணக்கிடப்பட்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கழிவுநீர் சேகரிப்பு கட்டமைப்பாக 150 மிமீ, முதல் 450 மிமீ விட்டமுள்ள சுடுமண் குழாய்கள் மற்றும் கான்கிரீட் குழாய்கள் 41.456 கிமீ நீளத்திற்கு பதிக்கப்பட்டு 1827 இயந்திரக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு 6605 வீட்டு இணைப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரானது வெண்பாக்கம் பள்ளம் மற்றும் ஹரிஹரன் பசார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணைகழிவு நீருந்து நிலையங்கள் மூலம் கள்ளுக்கடைமேடில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கழிவு நீருந்து நிலையத்திற்கு உந்தப்படுகிறது.
அங்கிருந்து, 4,231 கிமீ நீளத்திற்கு 150 மிமீ முதல் 500 மிமீ விட்டமுள்ள வார்ப்பு இரும்பு குழாய்கள் மூலம் சின்னகாவனத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 6.52 எம்.எல்டி சுத்திகரிக்கும் திறன் கொண்ட உயிரிப்படல நகரும் படுக்கை உலை தொழில்நுட்ப முறையில் இயங்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் 3.80 கிமீ தூரத்தில் உள்ள ஆரணியாற்றில் விடப்படுகிறது.தற்பொழுது, இத்திட்டத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பெற்று வீடுகளிலிருந்து கழிவு நீர் சேகரிக்கும் பொருட்டு உள் இணைப்பு பணிகள் நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் முதலமைச்சரால், இந்நகராட்சியில் உள்ள சுமார் 57000 மக்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஜெயசுதா, பொன்னேரி நகர்மன்ற தலைவர் பரிமளா விஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் தமிழ்மணி, பொன்னேரி நகராட்சி ஆணையர் தனலட்சுமி, பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

