II/IIAபதவிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு 8ம் தேதி
![]()
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II, தொகுதி – II/IIA பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 8 ம் தேதி நடைபெறும் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் பிப் 06 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி II (ம) II (அ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 08.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் வட்டத்தில் உள்ள 1 தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும் பிற்பகல் 124 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
மேலும், தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் தேர்வுக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடத்தில் தனித்தனியாக காவலர் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுகள் சிறப்பாக நடைபெற 1 தலைமை கண்காணிப்பாளர், 1 இயக்கக் குழு அலுவலர், துணை ஆட்சியர் நிலையில் 1 பறக்கும் படை குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதில் சென்றடையும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், திருவள்ளூர் மண்டலம் மூலமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, முற்பகல் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் சரியாக காலை 8.30 மணிக்குள்ளும் மற்றும் பிற்பகல் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் சரியாக 1.30 மணிக்குள்ளும் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். மேலும் காலை 9 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்குள் வராதவர்கள் தேர்வாணைய அலுவலர்களால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரம் முடிந்தும் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

