வெவ்வேறுசமுதாயதிருமணம் பெண்ணிற்கு சித்ரவதை

Loading

வெவ்வேறு சமுதாயத்தில்  திருமணம் செய்த பெண்ணிற்குச் சித்ரவதை: குழந்தையை மீட்க விசிக மாவட்ட செயலாளர்கள் களமிறங்கி எஸ்பியிடம் புகார்
வெவ்வேறு சமுதாயத்தில் திருமணம் செய்த காரணத்திற்காகக் கணவர் வீட்டாரால் சித்ரவதை செய்யப்பட்டு குழந்தையைப் பறிகொடுத்த பெண்ணிற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் களமிறங்கிப் புகார் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகள் வெண்ணிலா(22) என்பவருக்கும் ஈரோடு சிங்காநல்லூரைச் சேர்ந்த நந்தகுமார்(31) என்பவருக்கும் கடந்த 2021-ல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஹாஸ்னி என்ற பெண் குழந்தை உள்ளது. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் கடந்த ஓராண்டாக வெண்ணிலாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியுள்ளனர்.
கணவர் வீட்டாரின் கொடுமை தாளாமல் தப்பிச் சென்ற வெண்ணிலா இதுகுறித்து திங்களூர் காவல் நிலையம் சென்றபோது அங்கிருந்த கணவர் தரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அவரைச் சூழ்ந்துகொண்டு குழந்தையைத் தர மறுத்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தகாத வார்த்தைகளால் பேசித் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது குழந்தையை மீட்டுத் தரவும் கோரி பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் மற்றும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் வி.விஜயபாலன் ஆகியோர் உடனடியாகக் களத்தில் இறங்கிப் பெண்ணிற்கு ஆதரவாக நின்றனர்.
விசிக நிர்வாகிகளின் முன்னிலையில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கவும் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
விசிக நிர்வாகிகளின் இந்தத் துரித நடவடிக்கை அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
0Shares