ஈரோடுமாநகராட்சிகூட்டத்தில் அ.தி.மு.க.பெரும் அமளி

Loading

ஈரோடு மாநகராட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. பெரும் அமளி…! வெளிநடப்பு…!
 ஈரோடு ஜனவரி 30
 ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்டச் செலவுகள் மற்றும் வரி உயர்வு விவகாரத்தால் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்!
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆணையாளர்  அர்பித் ஜெயின் ஐஏஎஸ்., துணை மேயர் செல்வராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகளை முன்வைத்துப் பேசினர். அரசு திட்ட நிகழ்ச்சிகளுக்காகக் கூடுதலாகச் செலவு செய்யப்படுவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, அம்மா உணவகத் திட்டம் தொடர்பாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் பரபரப்பு நிலவியது.
காங்கிரஸ் உறுப்பினர் சபுராமா ஜாபர் சாதிக் பேசுகையில், “எனது 43-வது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. பணிகள் முடிந்தும் முத்துக்குமாரசாமி நகர் பூங்கா திறக்கப்படவில்லை; ஆயுர்வேத மருத்துவமனை ஓராண்டாகப் பூட்டிக் கிடக்கிறது. கோவை, திருச்சியை விட ஈரோட்டில் வரி உயர்வு அதிகமாக உள்ளது. இதைத் திருத்தக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார். மாநகராட்சி
எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர் கூறுகையில், “அ.தி.மு.க கவுன்சிலர்களின் வார்டுகளில் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தி.மு.க வார்டுகளில் மட்டும் பணிகள் நடக்கின்றன. சொத்து வரி குறைப்பு தீர்மானத்தை அமல்படுத்தாததைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வரி குறைக்கப்படும்” என்றார்.
இதற்குப் பதிலடி கொடுத்த தி.மு.க மண்டலத் தலைவர் பழனிச்சாமி, “அடுத்த தேர்தலிலும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே அமையும்” என்று பேசினார்.
கூட்டத்தின் இறுதியில், தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு, “வரும் பிப்ரவரி 9-ம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும்” என்று ஆணையாளர்  அர்பித் ஜெயின் ஐஏஎஸ்., விளக்கமளித்தார்.
0Shares