பெயிரா தலைவர் ஹென்றி குடியரசு தின வாழ்த்து

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர்  டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் 77வது குடியரசு தின விழாவை கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் இந்திய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

 

மேலும் டாக்டர் ஹென்றி வெளியிட்டுள்ள செய்தியில்….

 

குடியரசு தினம் என்பது இந்திய திருநாட்டின் ஆன்மா இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளாகும். இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மையை பேணி காக்கும் வகையில் இந்தியா குடியரசு நாடாக மாறிய இந்நன்னாளில் தாய் நாட்டின் விடுதலைக்காக தங்களின் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகிகளை வணங்கி நினைவு கூர்வோம் என பெயிரா கூட்டமைப்பின் சார்பாக உலகெங்கிலும் எனதருமை இந்திய சகோதர, சகோதரிகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதுடன் குடியரசு தினம் குறித்த ஒரு சிறிய பதிவினை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

இந்திய குடிமக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை பெறும் வகையிலும், இந்திய   இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மையை பேணி காக்கும் வகையிலும் தற்சார்பு, செழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டும், உலக நாடுகளின் அரசியல் அமைப்புகளை ஆய்வு செய்தும்  அறிவர் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையிலான குழுவினரால் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் இறுதியாக 1950 ஜனவரி 26ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, இந்தியா குடியரசு நாடாக மலர்ந்த நாளை இந்திய குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி உலகெங்கிலும் வாழும் இந்தியர்களால் தேசபக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்திய குடியரசு நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்கள் டெல்லி இர்வின் விளையாட்டரங்கில் 1950- ஆம் ஆண்டு இதே நாளில் தான் 21 குண்டுகள் முழங்க, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

 

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கண்ட வகையில் இன்று 77வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  தலைநகர் புதுடெல்லில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்திய ஜனாதிபதி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அதேபோன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள். இந்நிகழ்வில் அந்தந்த மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டசபை உறுப்பினர்கள், முப்படை தலைவர்கள் அரசு வெளிநாட்டு தூதுவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதித்துறை மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்வில் வீரதீர விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து முப்படைகள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், சாரண சாரணியர்களின் அணிவகுப்பும். கலாச்சாரம், கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியை தெரிவிக்கும் வகையில் கலாச்சார ஊர்திகள், ஆடல், பாடல் நாட்டுப்புற நடனங்கள் அணிவகுப்பில் இடம் பெறுவதுடன், வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நம் அனைவரின் மனதையும் கவரும் விதமாக இருக்கும்.

 

குறிப்பாக தலைநகர் புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா உலகமே உற்று நோக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாகவும், கண்ணை கவரும் வகையிலும் நடைபெறுவது வழக்கம். குடியரசு தின விழாவில் பிற நாடுகளின் தலைவர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். குடியரசுத் தலைவர் அவர்கள் தனது முதன்மைப் பாதுகாவலர்களான (President’s Bodyguard – PBG) குதிரை படை வீரர்கள் புடை சூழ குடியரசு தின விழா நடைபெறும் கடமைப் பாதைக்கு வருகை தருவார். பிரதமர் மற்றும் முப்படை தலைவர்கள் குடியரசு தலைவரை வரவேற்று மரியாதை நிமித்த சந்திப்பிற்கு பிறகு குடியரசுத் தலைவர் அவர்கள் கடமைப் பாதையில் அமைந்துள்ள தேசியக் கொடியை 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அதன் பிறகு வீரதீர செயல்கள் புரிந்த ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறும். வானில் ஹெலிகாப்டர்கள் விழா நடைபெறும் பாதையில் ‌ பூக்களை தூவி செல்ல குடியரசு தின நிகழ்ச்சி முப்படைகளின் அணிவகுப்புடன் ஆரம்பமாகும். அதனை தொடர்ந்து மிகப் பிரமாண்டமாக நடைபெறும் முப்படைகள், முன்னாள் ராணுவத்தினர், கமாண்டோ படை பிரிவினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், சாரண சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் அவர்கள் ஏற்றுக் கொள்வார். டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வினை கண்டு மகிழ்வார்கள். மேலும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் தேசபக்தி பாடல்களை பாடியும், கைகளை தட்டியும் வாழ்த்தி மகிழ்வார்கள்.

 

நமது இந்திய ராணுவத்தின் முப்படைகளின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் நடைபெறும் முப்படை வீரர்களின் அணிவகுப்பில் ஆண் இராணுவ வீரர்களுக்கு நிகராக பெண் இராணுவ வீரர்களும் ஒரே சீரான நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுடன், கட்டுக்கோப்பாக கம்பீரமாக, ராணுவ இசைக்குழுக்களின் இனிய இசை முழங்க அணிவகுத்து வருவதை காணும் பொழுது ஒவ்வொரு இந்தியர்களின் உள்ளங்களிலும் எழும் பரவசம் சொல்லி மாளாது. மேலும் நடைபெறும் அணிவகுப்பில் நவீன ஆயுதங்கள், ராணுவ கவச வாகனங்கள், பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் தேஜஸ் போர் விமானம், அக்னி, பிரம்மோஸ் போன்ற அதி நவீன ஏவுகணைகள், சக்தி வாய்ந்த கண்காணிப்பு ரேடார்கள், ட்ரோன்கள், ராணுவ தொழில்நுட்ப பிரிவுகள், ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் மற்றும்,  இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையின் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட  ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் அனைவரும் பிரம்மிக்கும் வகையில் விமானப்படை விமானங்களின் சாகசங்கள் என உலகிற்கு இந்தியாவின் ராணுவ வலிமையை எடுத்துக்காட்டும் விதமாக நடைபெறும் குடியரசு தின விழாவின் நிகழ்வுகள் நமது நாடு வலிமையான ராணுவத்தை கொண்டுள்ள நாடு என உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் வகையிலும் இந்நிகழ்வு திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

 

இன்றைய 77வது குடியரசு தின விழாவில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வழிகாட்டுதலில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தலைமையேற்று நடத்திய ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor – May 2025) துல்லியத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது நடத்திய வான்வழி தாக்குதலை, வெற்றிகரமாக முறியடிக்க பெரும் உதவியாக இருந்த ரஷ்யாவின் அதிநவீன S400 வான் பாதுகாப்பு அமைப்பும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது சிறப்பம்சமாகும்.

 

குடியரசு தின விழாவில் நமது இந்திய தேசம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் எனும் பன்முகத்தன்மையை உலகிற்கு உணர்த்துகின்ற வகையில் பிற மாநிலங்களின் கலாச்சாரம், கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியை தெரிவிக்கும் கலாச்சார ஊர்திகள், ஆடல் பாடல் நாட்டுப்புற நடனங்கள் அணிவகுப்பில் இடம் பெறுவதுடன், பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும். குடியரசு தின விழாவின் இறுதியாக நடைபெறும் ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் காண்போரை அதிசயிக்க செய்யும். இன்றைய குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் நிறைவாக, ஜனவரி 29 ஆம் தேதியன்று வரலாற்று சிறப்புமிக்க ‘பீட்டிங் ரிட்ரீட்’ விழா, ரைசினா மலைப்பகுதியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் முப்படைகள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டெல்லி காவல் துறையினரின் இசைக் குழுக்கள் தேசபக்தி பாடல்களை இசைத்து அணிவகுப்பை நிகழ்த்துவார்கள். இந்நிகழ்வு குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் ராணுவ வீரர்கள் பாசறைக்கு திரும்பும் விழா எனவும் கூறப்படுகிறது.

 

மேற்கண்ட வகையில் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட குடியரசு தினத்தை ஜனநாயகத்தின் திருவிழாவாக கொண்டாடும் உலகமெங்கிலும் வாழும் இந்தியர்களுக்கு எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதுடன் பாடுபட்டு பெற்ற குடியரசு தினத்தை பேணி காத்து, ஜாதி, மதம், இனம், மொழி கடந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்கின்ற எண்ணத்தோடு ஒன்றுபட்டு நமது தாய் திருநாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றிட இந்நன்னாளில் உறுதி ஏற்போம் என தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் டாக்டர்.ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்

0Shares