கல்லூரி மாணவர்கள் 2 பேரை கத்தியால்கொலை வெறி தாக்கு

Loading

திருவாலங்காட்டில் போதையில் வந்த இளைஞர்களை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேரை பட்டா கத்தியால் கொலைவெறி தாக்குதல் : திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை :

திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் (18), ஹனீஷ் (18) இருவரும் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் பி ஏ இளங்கலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் வழக்கம்போல் காலை ரயில் மூலம் கல்லூரிக்கு சென்று மாலை மணவூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு நிறுத்தி வைத்திருந்த அவர்களின் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். லட்சுமி விலாசபுரம் சுடுகாடு பகுதியில் சென்றபோது எதிர் திசையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாக சென்ற வாலிபர்களை கல்லூரி மாணவர்கள் தட்டி கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் 2 பேர் அவர்கள் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் கல்லூரி மாணவர்களை தலை கை, கால் உள்ளிட்ட உடல் முழுவதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி அங்கிருந்து சென்று விட்டனர். ரத்தம் சொட்ட படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் லட்சுமி விலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ராகுல் (19), தக்ஷிணாமூர்த்தி என்பவரின் மகன் விஷ்வா (18) ஆகியோர் போதையில் கல்லூரி மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கல்லூரி முடித்து பைக்கில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் மீது பட்டா கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
0Shares