வளர்ச்சி திட்டபணிகள் ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
![]()
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஜன21 : கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் செயல்படும் பொது விநியோக அங்காடியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பொருள் இருப்பு குறித்தும் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பான பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து தாமரைக்குளம் பகுதியில் மழைநீர் வடிக்கால் வாய்களில் கழிவுநீர் கலந்து தாமரை குளம் மாசுப்படுவது தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
மேலும், பெத்திகுப்பம் ஊராட்சியில் தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 198 வீடுகளின் கட்டுமான இறுதி பணிகளையும், சாலை வசதிகள், மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளிட்ட பணிகளையும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் ரூ.7.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளையும், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஒபசமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.34.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமானப் பணிகளையும், ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
இறுதியாக, பூவலம்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிட கட்டுமான பணிகளையும், மங்களபுரம் ஊராட்சியில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரை பால கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
இதில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) எஸ்.ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், சந்திரசேகர்,உதவி பொறியாளர்கள் குருபிரசாத், ஐசக் கொவின், பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

