விபத்தில்லா ஈரோட்டை உருவாக்க விழிப்புணர்வு
![]()
விபத்தில்லா ஈரோட்டை உருவாக்க விழிப்புணர்வு: வடக்கு போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை…!
ஈரோடு ஜனவரி 21
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா அவர்களின் ஆணைக்கிணங்க போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்வஸ்திக் கார்னர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பதாகைகளை வழங்கினர். அப்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது மற்றும் அதிவேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், சிறுவர் சிறுமியர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது, உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது, பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது, ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. சாலையைக் கடக்கும்போது செல்போன் பேசுவதைத் தவிர்க்கவும், நடந்து செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் கேட்டுக்கொண்ட போலீசார், போக்குவரத்து விதிகள் மற்றும் சிக்னல்களை முறையாக மதித்து, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி விபத்தில்லா ஈரோட்டை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். “குடும்பம் வாழ கவனமுடன் வாகனம் ஓட்டுவோம், விபத்தில்லா ஈரோட்டை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நிறைவு பெற்றது.

