பொங்கல்தொகுப்பில் பானைஅடுப்பு வழங்கவேண்டும்
![]()
அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பாண்டங்களான பானைகள், அடுப்பு, சட்டி ஆகியவற்றையும் சேர்த்து வழங்கி குல தொழிலை பாதுகாத்திட வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 13 : மண்பாண்டத் தொழில் என்பது களிமண்ணைப் பயன்படுத்தி பானைகள், மண் அடுப்பு. மண் குடங்கள், பொம்மைகள் போன்றவற்றைச் செய்யும் பழமையான கலை மற்றும் கைத்தொழில் ஆகும்; இது குலத்தொழில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மண்பாண்டத்தால் செய்யப்படும் பானை, சட்டி, அடுப்பு, அகல் விளக்கு ஆகியவற்றை கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்தனர். வீட்டில் செய்யும் உணவு வகைகளை இந்த சட்டி, பானையில் செய்து அதை சாப்பிட்டவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
உணவுகெட்டுப் போகாமல் நஞ்சுத் தன்மையை உறிஞ்சி நல்ல உணவாக மாற்றித் தருவதால் நோயின்றி வாழ முடிந்தது. சமையல் செய்ய முதன் முதலில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரமாக இந்த சட்டி பானையும் தான் உள்ளது. இந்த சட்டி பானையில் சமைத்து சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி போன்ற வியாதி குறையும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இந்த மண்பாண்டத் தொழில் தற்போது நலிவடைந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மட்டும் சம்பிரதாயத்திற்காக வாங்கி சமைக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் தற்போது அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது சின்ன பானைகளையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் மண்பாண்ட தொழிலாளர்கள் முன்னேற்றம் அடையு முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசு சார்பில் சட்டி பானை செய்ய இயந்திரம் வழங்கினால் குலத் தொழிலை இளைஞர்கள் கற்று பயன்பெறுவார்கள் என்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொங்கல் திருநாள் தொடங்க 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திருவள்ளூர் நகர் பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மேல் நல்லாத்தூர், புட்லூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, ஈக்காடு, திருப்பாச்சூர், கடம்பத்தூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் மண்பானை மற்றும் அடுப்பு தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற தொழில் செய்கின்ற எங்களிடம் பானைகளை வாங்கி பொங்கலை கொண்டாட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

