FAIRA கூட்டமைப்பின் 15வது தேசிய மாநாடு
![]()
FAIRA கூட்டமைப்பின் 15வது தேசிய மாநாடு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் வரும் 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்து FAIRA தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
பெருமதிப்பிற்குரிய பத்திரிக்கை / தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத்துறையை சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்கள்….
தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையை தலைமையிடமாக கொண்டு FAIRA கூட்டமைப்பு கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் ஆற்றல்மிகு எழுச்சித் தலைவர் திருத்தகு. டாக்டர்.ஆ.ஹென்றி அவர்களால் கடந்த 2010-ஆம் ஆண்டு சங்கமாக தொடங்கப்பட்டு பிறகு கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பாக செயல்பட தொடங்கியது.
FAIRA கூட்டமைப்பு தேசியளவில் 14 மாநிலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் 54ஆயிரம் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு கடந்த 14 வருடங்களாக, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் – எழுச்சிக்கும் ஆகச்சிறந்த சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் கோரிக்கைகள் மூலம் பரிந்துரைத்து மிகச் சிறப்பான முறையில் மிக வலிமையாக செயல்பட்டு வருகின்றது.
FAIRA கூட்டமைப்பில் தேசிய மற்றும் மாநில அளவில் கட்டுனர்களும், (BUILDERS) வீட்டுமனை அபிவிருத்தியாளர்களும், (LAYOUT PROMOTERS), வடிவமைப்பாளர்களும் (ARCHITECT) மற்றும் கட்டுமான பொறியாளர்களும் (ENGINEERS) பொறுப்பாளர்களாகவும், உறுப்பினர்களாகவும் அங்கம் வகித்து வருகின்றனர்.
FAIRA கூட்டமைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு தேசிய மற்றும் மாநில அளவிலான குழுவிற்கு வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் (LAYOUT PROMOTERS). கட்டுனர்கள் (BUILDERS), வடிவமைப்பாளர்கள் (ARCHITECT) மற்றும் கட்டுமான பொறியாளர்கள் (ENGINEERS) குழுவிற்கு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
அந்த வகையில் FAIRA கூட்டமைப்பின் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான தேர்தல் கடந்த 30.11.2025 அன்று FAIRA தலைமை அலுவலகத்தில் முறைப்படி நடைபெற்ற 8-வது தேசிய மற்றும் மாநில புதிய பொறுப்பாளர்கள் தேர்தலில் தேசிய குழுவிற்கு 43பொறுப்பாளர்களும், மாநில அளவிலான வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் குழுவிற்கு 37பொறுப்பாளர்களும் (LAYOUT PROMOTERS), கட்டுனர்கள் குழுவிற்கு 34பொறுப்பாளர்களும் (BUILDERS), வடிவமைப்பாளர்கள் (ARCHITECT) மற்றும் கட்டுமான பொறியாளர்கள் குழுவிற்கு 18பொறுப்பாளர்களும் (ENGINEERS) மற்றும் புதுச்சேரி மாநில குழுவிற்கு 10பொறுப்பாளர்கள் என ஆகமொத்தம் 142 புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
FAIRA கூட்டமைப்பு பொதுமக்களுக்கும் – கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களுக்கும் – அரசுக்கும் பாலமாகவும் – பலமாகவும் விளங்குகிறது. மேலும் மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடம் இன்றியமையாதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கான சொந்த இல்லம் என்பது வாழ்நாள் லட்சியமாகவும், கனவாகவும் இருந்து வருகிறது. அவ்வகையில் அனைவரின் இல்லக் கனவுகளை நினைவாக்கும் வகையில்,
கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட துறைகளான தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி, பதிவுத்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், வீட்டுவசதி வாரியம் (TNHB) பொதுப்பணித் துறை, தொழில்துறை போன்ற துறைகளினால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு புதிய சட்ட திட்டங்கள், கொள்கை முடிவுகள், நடைமுறை மாற்றங்கள். அதிகார பகிர்வுகள் உள்ளிட்டவற்றில் FAIRA கூட்டமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட கோரிக்கைகள், அறிக்கைகள், கடிதங்கள், அறப்போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள், நேரலை விவாதங்கள், பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்கள் போன்றவை மிக முக்கிய பங்காற்றி வருகின்றன.
FAIRA நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் திருத்தகு. டாக்டர்.ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் மூலம் அரசு மேற்கண்ட துறைகளில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்கும் – எழுச்சிக்கும் ஆகச்சிறந்த அரும்பெரும் சட்ட திட்டங்களையும், மக்களுக்கான மகத்தான செயல் திட்டங்களையும் முன்னெடுத்து, நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி பாராட்டுக்களை தெரிவிக்கும் வகையில், தமிழக அரசுக்கு நன்றி பாராட்டு, அரசு துறைகளின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான செயல் திட்டங்கள் குறித்த காணொளிகள் வெளியீடு & புகைப்படக் கண்காட்சி மற்றும் 8-வது தேசிய மற்றும் மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோர்களுக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இம்மாநாட்டு நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் பேராசிரியர் கீ.வீரமணி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.நாசர் அவர்கள், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் திரு.மு.தமிமுன் அன்சாரி.Ex.MLA அவர்கள், விஐடி பல்கலைக்கழக வேந்தர் திரு.ஜி.விஸ்வநாதன் அவர்கள், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் லோக் அதாலத் நீதிபதி திரு.டி.என்.வள்ளிநாயகம் அவர்கள், தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி திரு.அ.முகமது ஜியாவுதீன் அவர்கள், தமிழ்நாடு தகவல் ஆணையர் (State Information Commissioner) திரு.ஆர்.பிரியாகுமார் அவர்கள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி Dr.M.ராமசுப்பிரமணியம் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினார்கள், அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து FAIRA கூட்டமைப்பின் தேசிய மற்றும் மாநில குழுக்களில் பொறுப்பாளர்களாக இருக்கிற கட்டுனர்களும், (BUILDERS) வீட்டுமனை அபிவிருத்தியாளர்களும், (LAYOUT PROMOTERS) வடிவமைப்பாளர்களும் (ARCHITECT) மற்றும் கட்டுமான பொறியாளர்களும் (ENGINEERS) அதேபோன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இருந்து மாநில, மாவட்ட, தாலுக்கா குழுக்களின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அதே போன்று கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் – எழுச்சிக்கும் சம்பந்தப்பட்ட வீட்டுவசதி துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி, பதிவுத்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பொதுப்பணித் துறை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் இன்னும் கொண்டு வர வேண்டிய சட்டதிட்டங்கள், சட்டதிருத்தங்கள், மாற்றியமைக்க வேண்டியவைகள், எளிமைப்படுத்த வேண்டியவைகள் என ஆக்கபூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றி, மகத்தான தீர்மானங்களையும் மைய – மாநில அரசுகளுக்கு முன்வைத்து FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை தேசிய பொதுச் செயலாளர் திரு. V.ஜெயச்சந்திரன் ஒருங்கிணைக்க, தேசிய பொருளாளர் திரு. R.சந்திரசேகர் தலைமையில் நடைபெறுகிறது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய பத்திரிக்கை / தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத்துறை சார்ந்த நண்பர்கள், தாங்கள் – தங்கள் பத்திரிக்கை / தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத்தின் சார்பில் நிருபர்களையும் மற்றும் புகைப்பட கலைஞர்களையும் அனுப்பிவைத்து, செய்தி சேகரித்து தாங்கள் – தங்கள் பத்திரிகை / தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உதவிட வேண்டுமெனகேட்டுக் கொண்டுள்ளார்.

