ஈரோட்டில் 9-வது சித்த மருத்துவ தின விழா
![]()
ஈரோடு:
ஈரோட்டில் 9-வது சித்த மருத்துவ தின விழா: மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி கண்காட்சியைத் திறந்து வைத்து மருந்து பெட்டகங்களை வழங்கினார்
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கின் மூன்றாவது தளத்தில் 9-வது சித்த மருத்துவ தின விழா மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத் திறப்பு விழா (05.01.2026) அன்றுநடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அலுவலகத்தைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சித்த மருத்துவ கண்காட்சியினைப் பார்வையிட்டார்.
இந்த விழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் பார்வைக்காக மூலிகை கண்காட்சி, மருந்து மூலச்சரக்குகள், சித்த மருத்துவ நூலகம், சிறப்பு மூலிகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய எண்ணெய் மற்றும் சர்க்கரை வகைகள், மருத்துவப் பயன் கொண்ட மண் வகைகள், சிறுதானிய உணவு மற்றும் பால் வகைகள் எனப் பல்வேறு அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சமீனா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான மகப்பேறு சஞ்சீவி திட்டம், பள்ளி இளந்தளிர் திட்டம் மற்றும் தொற்றா நோய் தடுப்புத் திட்ட கண்காட்சிகளும், மருந்து கண்காணிப்பு மைய கண்காட்சியும் இடம்பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சித்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்றா நோய், வர்மம், தோல் மற்றும் புற சிகிச்சை எனப் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மகப்பேறு சஞ்சீவி திட்டத்தின் கீழ் 3 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சுகப்பிரசவத்திற்கான 11 வகை மருந்துகள் அடங்கிய பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்குச் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மருந்து பெட்டகங்களையும் ஆட்சித்தலைவர் வழங்கினார். அதேபோல், பள்ளி இளந்தளிர் திட்டத்தின் கீழ் ரத்தசோகை மற்றும் கற்றல் திறன் குறைபாடுகளை நீக்கும் மருந்து பெட்டகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
முகாமில் பங்கேற்ற 638 பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நிலவேம்பு குடிநீர், கபசூர குடிநீர், முடவாட்டுக்கால் சூப் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட்டன. வர்ம சிகிச்சை, நசிய சிகிச்சை, ஒற்றடம், தொக்கணம் மற்றும் அகசிவப்பு கதிர் சிகிச்சை போன்ற சிறப்புச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) சாந்தகுமாரி, உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் கண்ணன், லெனின், சுடர்க்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

