இளங்கலை நர்சிங் முடித்த மாணவர்களுக்கு வேலை
![]()
திருவள்ளூர் ஜன 02: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து இளங்கலை நர்சிங் முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சியானது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியானது இரண்டு வழிமுறைகளில் நடைபெறும் முதல் 2 வாரங்களில் இணையவழி கற்றல் முறையில், அடுத்த 4 வாரங்களுக்கு முன்னணி நிறுவனமான அப்பல்லோ மருத்துவமனைகள் அல்லது மாணவர்களுக்கு வசதியாக அருகாமையிலுள்ள அப்பல்லோ தொடர்புடைய பிற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்க தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமனை அதனுடன் தொடர்புடைய முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் 20 முதல் 25 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள்.இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

