நெல் கொள்முதல் பணிசா.மு.நாசர் தொடக்கினார்

Loading

கே.எம்.எஸ் சம்பா கொள்முதல் பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் : அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சார்பில் கே.எம்.எஸ் சம்பா கொள்முதல் பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொள்முதல் பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
முதலமைச்சர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றறை ஆண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பெருமழை பாதிப்புகளால் ஏற்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்து 11.74 லட்சம் மெட்ரிக் டன்னாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 187 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால்  2021-ல் 4.90 இலட்சம் ஏக்கரிலும்,  2022-ல் 5.36 லட்சம் ஏக்கரிலும்  2023-ம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர். திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 47,641 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு, 2,62,025 மெட்ரிக்டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்காக 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,25,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட உள்ளது. கடந்த சொர்ணவாரி பருவத்தில் மாவட்டத்தில் 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 84,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,391 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 215 கோடியே 47 லட்சம் தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் அவர்கள் கூறினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், த.நு.வா.க மண்டல மேலாளர் செல்வம், இணை இயக்குநர் (வேளாண்மை) செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, த.நு.வா.க துணை மண்டல மேலாளர் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares