கைத்தறிகண்காட்சிதொடக்கம்30% தள்ளுபடிவிற்பனை
![]()
ஈரோடு
ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடக்கம்: 30% தள்ளுபடி விற்பனைக்கு அமைச்சர்கள் அழைப்பு
ஈரோடு: ஈரோடு செட்டிபாளையம், அவல்பூந்துறை ரோட்டில் உள்ள ஏ.எம்.மஹாலில், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி இன்று (30.12.2025) தொடங்கியது. வரவிருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆகியோர்கள் இணைந்து இன்று காலை 10.00 மணியளவில் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கடலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 116 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மேலும், ஈரோடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், நெசவாளர் சேவை மையம், பூம்புகார் விற்பனை நிலையம், காதி கிராம தொழில் வாரியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வெளிமாநில கைத்தறி நிறுவனங்களின் ஸ்டால்கள் என மொத்தம் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டுச் சேலைகள், கோரா சேலைகள், படுக்கை விரிப்புகள், ஜமக்காளங்கள், மேட், துண்டுகள், வேட்டிகள் மற்றும் லுங்கிகள் போன்ற பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சமாக, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 14 தினங்களுக்கு நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் ரூ.2.00 கோடி அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12-ஆம் தேதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக இக்கண்காட்சி செயல்படும். தமிழகத்தின் பாரம்பரிய நெசவுக் கலைகளைப் போற்றும் வகையிலும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சலுகை விலையில் துணிகளை வாங்கிப் பயனடையுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

