தென்னை நார்உற்பத்தியாளர்கள் சங்கபொதுக்குழு

Loading

ஈரோடு
ஈரோட்டில் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அரசு மானியத் திட்ட ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார்புகள் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அம்மன் காட்டேஜில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தனசேகரன் தலைமை வகிக்க, செயலாளர் சதாசிவம் வரவேற்புரையாற்றி புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் மற்றும் டான்சியா துணைத் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு காயர் பெடரேஷன் தலைவர் பூச்சாமி சிறப்புரையாற்றினார். பொருளாளர் செந்தில்குமார் வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய, அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் பேசுகையில், “தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக தென்னை நார் தொழிலுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘டான்காயர்’  நிறுவனம் மூலம் உலகத்தரம் வாய்ந்த சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறுந்தொழில் குழுமம் திட்டத்தின் கீழ், ஓடாநிலை ‘நொய்யல் கயிறு குழுமம்’ போல புதிய குழுமங்களை உருவாக்க 70 சதவீதத்திற்கும் மேல் அரசு மானியம் வழங்கப்படுகிறது. சூரியசக்தி மின்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தையில் தடம் பதிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். நிகழ்வில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. இறுதியில் சங்கத் துணைத் தலைவர் சண்முகம் நன்றியுரை கூறினார். இதில் திரளான தென்னை நார் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
0Shares