அதிசய தலைவர் அய்யா நல்லகண்ணுக்கு வாழ்த்து
![]()
அதிசய தலைவர் அய்யா நல்லகண்ணுக்கு தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்து
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், அரசியலில் அப்பழுக்கற்ற தூய்மையான மற்றும் அதிசயமான அபூர்வ தலைவர் அய்யா நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படும் போராளி நல்லகண்ணு அய்யா அவர்கள், பொதுவாழ்க்கையில் எளிமைக்கும், அரசியலில் தூய்மையானவர் என்பதற்கும் இன்றுவரை ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கி கொண்டிருக்கிறார்”
“சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லக்கண்ணு இன்று (26-12-2025) தனது 101வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்த இவர், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கணிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்கான போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்துள்ளார்.
நேர்மை, தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரம் போன்றவற்றின் மறுபெயர்தான் நல்லகண்ணு. இதே 101 வருடங்களுக்கு முன்பு, இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொடங்கப்பட்டது… கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் அய்யா நல்லகண்ணுதான்.
பாறையை போல துணிச்சலுடன், எண்ணற்ற அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட அஞ்சாநெஞ்ச சிங்கம்தான் அய்யா நல்லகண்ணு..
அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் அய்யா நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 வருடங்கள் செயலாற்றியவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அய்யா நல்லகண்ணு, 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக பணியாற்றி உள்ளார்.
தன் இனத்து மக்களையே எதிர்த்துப் போராடி, அடித்தட்டு மக்களை தட்டி எழுப்பி, சமூகநீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடி கொண்டிருக்கும் அற்புத மனிதர். மக்களுக்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, வாழ்க்கை முழுவதும் தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் மனித புனிதர்! நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழலை காப்பதற்காகவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் சமரசம் இன்றி தொடர்ந்து போராடும் நெஞ்சுரம் மிக்கவர்.
அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படும் போராளி நல்லகண்ணு அய்யா அவர்கள், பொதுவாழ்க்கையில் எளிமைக்கும், அரசியலில் தூய்மையானவர் என்பதற்கும் இன்றுவரை ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கி கொண்டிருக்கிறார்.
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளில் மக்கள் நலனுக்கான நேர்மையான மற்றும் தூய்மையான அப்பழுக்கற்ற அரசியலை நாம் அனைவரும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும்!.
அய்யா நல்லகண்ணு அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன உறுதியுடனும், நீடூழி வாழ்ந்து தாங்கள் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கும் சிறந்த தொண்டினை ஆற்றிட இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து கொள்கிறேன்” என்று பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி அபூர்வ தலைவர் ஐயா நல்லகண்ணுக்கு தெரிவித்துள்ள தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

