டிச.27,28,ஜன3, 4 தேதிகளில்வாக்குச்சாவடிகளில்முகாம்

Loading

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வரும் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்  மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் டிச 26 : இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணியினை மேற்கொள்ள கடந்த 27.10.2025 அன்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதில், 04.11.2025  முதல் 14.12.2025 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு பெறப்பட வேண்டும் என்றும்,  19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும், 19.12.2025 முதல் 18.01.2026 வரை உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகவும், 19.12.2025 முதல் 10.02.2026 வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்து 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி,ஆவடி, மதுரவாயல்,அம்பத்தூர்,மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 19.12.2025 முதல் 18.01.2026 வரை உரிமைகோரல் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகும்.
 இக்குறிப்பிட்டுள்ள காலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பிற மாவட்டங்களிலிருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத பட்சத்தில், தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்,01.01.2026 அன்றைய தேதியில் 18 வயதாகும் அனைத்து நபர்களும் தங்களது பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளவும் உறுதிமொழி படிவத்துடன் படிவம்-6னையும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க கோரிக்கையாக படிவம் 7-னையும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், பெயர்திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளிகள் பற்றிய குறியீடு மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ள படிவம்-8 னையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடமோ, அப்பகுதியின் வாக்காளர் பதிவு அலுவலகத்திலோ அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்திலோ வழங்கலாம். மேலும், புதியதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, வரும் 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து இம்முகாம்களில் வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares