தொழில் முனைவோர்கு கடன் வசதி முகாம்

Loading

தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம் :  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் டிச 24 : தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோரை தொழில் முனைவோராக்கும் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கடந்த நிதியாண்டு முதல், 25 வகையான கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘கலைஞர் கைவினைத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்சமயம், தமிழ்நாட்டைச் சார்ந்த மகளிர் மற்றும் திருநங்கைகள் தொழில் முனைவோராக்க, ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்க ரூ.10 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடு உள்ள வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களை 25% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பெற்று தொழில் தொடங்கலாம்.
தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அன்றைய தினமே இணையத்தில் இலவசமாக பதிவு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” குறித்த விழிப்புணர்வு மற்றும் கடன் வசதியாக்கல் முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு மாவட்ட முழுவதிலும் இருந்து 204 பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு புதிதாகத் தொழில் தொடங்க ஆலோசனைகள் பெற்று, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதியாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட அளவிலான ‘தொழில் முனைவோர்களுக்கான வசதியாக்கல்” கூட்டத்தில் 66 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.78 கோடி மதிப்பிலான கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.இந்தக் கடன் வசதியாக்கல் கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி மேலாளர், வங்கிகளின் மண்டல அளவிலான மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
 மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் தாமதமின்றி நேரடி மற்றும் அரசின் திட்டங்களின் மூலம் கடன் வசதி செய்து தர அனைத்து வங்கிகளின் பங்களிப்பினையும் உறுதி செய்ய வேண்டும் என வங்கி மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டார்.
0Shares